4.3.08

புற நரகம்

ந்த கதை நடந்த இடத்தை நான் சொல்லப் போவதில்லை. ஆனால் என்னென்ன நடந்தன என்பதை மட்டும் சொல்கிறேன்.

* புறம்போக்குப் பகுதி * வெட்டவெளிப் பகுதி * காட்டுப் பகுதி * பொதுக் கழிப்பறைப் பகுதி * குப்பைத் தொட்டிப் பகுதி - இவற்றுள் ஏதாவது ஓர் இடத்தில் இந்தக் கதை நடந்திருக்கலாம்.

அந்த இடத்தில் மொத்தம் 12 பேர் உட்கார்ந்திருந்தனர். அவர்களுள் அடியேனும் ஒருவன்.

சற்று குண்டான ஆசாமி ஒருத்தன், நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான். அரைகுறைத் தூக்கத்திலேயே எழுந்தான். போதைப் பாக்குப் பொட்டலத்தைப் பிரித்தான். கையில் வைத்து நன்றாக நசுக்கினான்.
பெண்கள் பேன் பொறுக்குவது போல, சில துணுக்குகளை எடுத்து வெளியே போட்டான். மீண்டும் நசுக்கினான். தன் புனித உமிழ்நீரை வடித்து, அதை கொஞ்சம் ஈரமாக்கினான். ஒரு குழல் மாத்திரை அளவுக்கு உருட்டி, தன் கடைவாய்ப் பல்லில் வைத்தான்.

சற்று நேரத்தில் ஆடுமாடு போல் சப்பு சப்பென்று அசை போட்டான். அதில் சில புனித உமிழ்நீர்த் துளிகள் எதிரே அமர்ந்திருந்த மனிதப் பூச்சிகள் மீது தெறித்தன. அதற்கு அவன் என்ன செய்வான் பாவம்? உமிழ்நீரைக் கேட்க வேண்டிய கேள்வி. நன்றாக போதை ஏறும் வரை, பாக்குச் சாறை சப்பியவன், தான் அமர்திருக்கும் இடத்திலேயே குனிந்து, பளிச்சென துப்பினான்.

அடுத்து ஒல்லியான ஒரு நபர். அச் அச் அச் என நாலைந்து முறை தும்மினான். தன் திரு மூக்கில் சுரந்த சளியை பிளாச் சென பிடித்து, சுண்டி வீசினான். மேலும் மேலும் அவனுக்கு சளிகள் சுரந்து கொண்டே இருக்க, ஆவேசத்தில் மூக்கின் இடது துவாரத்தை அடைத்து விட்டு, "பூப்" என சீந்தினான் பாருங்கள். அங்கு அமர்ந்திருந்த எல்லா மானிடர்களின் மீதும் திருப்பொழிவு நடந்தது.

மேலும் வெற்றிலைச் சாறை ஈஸ்ட்மென் கலரில் துப்பிய வேட்டிக்காரர். பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு, எண்ணெய் தேய்த்த தாளை சுருட்டி வீசிய பெரியவர்; செல்பேசியில் வானொலிப் பாடலை அலறவிட்டு, எல்லோருக்கும் இலவச தலைவலி கொடுத்த மாணவன்.

அந்த இடத்தின் சுவரைப் பார்த்தால், '"சேகருக்கும் லதாவுக்கும் காதல்" மற்றும் "இந்த நடிகன் ஒரு புறம்போக்கு" "அந்த நடிகன் ............. மகன்" முதலிய குழாயடிச் சண்டைகளில் பயன்படுத்தும் செம்மொழிச் சொற்கள் இடம்பெற்றிருந்தன.

இப்படி ஆளாளுக்கு தங்களால் முடிந்தளவுக்கு அந்த இடத்துக்கு ஏதாவது ஒரு சேவை செய்து கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு பெண்மணி. இவளைப் பற்றி சொல்லவில்லை எனில், நான் பிறந்ததற்கு பொருளே இல்லை.
வயது 35 இருக்கும். தன் நாக்கைத் தவிர உடல் எல்லா பகுதிகளிலும் அணிகலன்களைப் பூட்டி, ஏறக்குறைய சுசீந்திரம் தேர் போல தோன்றினாள்.
இடது கையில் 2-3 வயது குழந்தை. ஆணா பெண்ணா என தெரியவில்லை. வலது கையில் மினரல் வாட்டர் பாட்டில் வைத்திருந்தாள். இந்தப் பாட்டில் த்ரீஇன்ஒன் பணிகளைச் செய்யப் போகிறது.

தன் பையிலிருந்து ஒரு பொட்டலத்தைப் பிரித்து, தோசையை சாப்பிட்டு ஏப்பம் விட்டாள். அவ்வப்போது, மினரல் வாட்டர் குடித்தாள். அடுத்து, சாப்பிட்ட தாளையும் இலையையும் கசக்கி சுருட்டி அதே இடத்திலேயே போட்டாள்.
அடுத்து, தன் எச்சில் வாயையும் கையையும் அதே மினரல் வாட்டராலேயே கழுவினாள். தன் முகத்தையும் அதே தண்ணீராலே கழுவிவிட்டு, கண்ணாடியில் முகம் பார்த்தாள்.

கடைசியாக அவள் செய்ததுதான், கின்னசில் இடம்பெற வேண்டியது. அந்தக் குழந்தை எதற்கோ அழ, புரிந்துகொண்டு, அந்த இடத்தின் ஓரத்தில் ஒதுக்கி, ஒண்ணுக்கு நிற்க வைத்தாள். முடிந்தவுடன் நனைந்த அதன் ஜட்டியை, அந்த மினரல் தண்ணீரால் அதே இடத்தில் அலசினாள்.

சரி, இப்போது இந்த கதை நடந்த இடத்தை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா? சரி நானே சொல்கிறேன்.
சென்னை - புறநகர் மின்தொடர் வண்டியிலுள்ள ஒரு பெட்டியில்தான் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

"இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா வல்லரசு ஆகப் போகிறது" என நம் முன்னாள் குடியரசுத் தலைவர் - கனவு கண்டு தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.

கலி முத்திப் போச்சு

மின் கடிகாரம் காலை 8.00 மணியைத் தொடும் முன்பே அந்த வங்கி சுறுசுறுப்பையும் செயற்கைக் குளிரையும் காட்டியது. வேட்டி, கருப்புச் சட்டையுடன் புதிய மேலாளராகப் பொறுப்பேற்றிருந்த கபிலன் 52 வயதிலும் 25 வயது இளைஞனின் சுறுசுறுப்பைக் காட்டிக் கொண்டிந்தார்.
தமிழம் வங்கி, அந்த பகுதியில் அது புகழ்பெற்ற வங்கியாதலால், 18 வயது முதல் 81 வரை புதிதாகக் கணக்கு தொடங்க வரிசையாகக் காத்திருந்தனர். கபிலன் அவர்களுக்குக் குளிர்பானம் வரவழைத்துக் கொடுத்து, உடனுக்குடன் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டிருந்தார்.
திறந்த வயிற்றுடன் அந்தப் பகுதியில் வெட்டியாகச் சுற்றிக் கொண்டிருப்பவன் கிச்சாமி. பேய், பெருச்சாளி என சொல்லி அந்தப் பகுதி மக்களை ஏமாற்றிப் பிழைத்து வந்தான்.
கிச்சாமிக்கு ஒருமுறை குலுக்கல் சீட்டில் (இது லாட்டரிச் சீட்டு புழக்கத்தில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி) மூன்று கோடி ரூபாய் பரிசு விழுந்து தொலைத்து விட்டது. அவ்வளவு பெரிய்ய்ய்ய்ய பணத்தை என்ன செய்வது என உச்சிமுடியைப் பிய்த்துக் கொண்டான்.
இதைக் கேள்விப்பட்ட எல்லா வங்கியாளர்களும் 'நான் முந்தி, நீ பிந்தி' என தத்தம் வங்கிகளில் பணத்தை வைக்க (டெபாசிட் செய்ய) கேட்டுக் கொண்டனர். ஆனால் புகழ்பெற்ற தமிழம் வங்கியில் பணத்தை வைக்க முடிவு செய்தான் கிச்சாமி.
தமிழம் வங்கியிலிருந்து யாரும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லையே என்ற எரிச்சல் மேலிட்டது அவனுக்கு. புகைச்சலை கொஞ்சம் அடக்கிக் கொண்டு தமிழத்துக்குள் நுழைந்தான்.
கிச்சாமியை யாரும் 'வா எனவும் அழைக்கவில்லை; போ எனவும் சொல்லவில்லை. தாங்க முடியாத எரிச்சலில் மேலாளர் கபிலனைச் சந்தித்தான்.
"என்ன சார் நினைச்சிருக்கீங்க? நான் யாருன்னு தெரியுமா?" கிச்சாமி குதித்தான்.
"தெரியாதே?! படங்கள்ல நடிச்சிருக்கீங்களா?" கபிலன் அமைதியாகக் கேட்டார்.
"கிண்டல் ஆங்? லாட்டரில எனக்கு மூணு கோடி ரூபா விழுந்திருக்கு"
"அய்யோ பாவம்"
"என்ன கொய்யோ பாவம்? உங்க பேங்குலத்தான் டெபாசிட் பண்ணப் போறேன்"
"தாராளமா பண்ணிக்கோங்க! அதுக்கான படிவம் நிரப்பித் தரணுமா?"
"ஆப்ட்ரால் 100 ரூபா, 300 ரூபா டெபாசிட் பண்றவங்களுக்கு ராச மரியாதை கொடுக்கறீங்க?! ஆனா நான் கிட்டதட்ட ரெண்டு கோடி டெபாசிட் பண்ணப் போறேன். என்னைய கண்டுக்கவே இல்லை! என்ன விளையாடுறீங்களா?"
சினத்தால் தலை கிறுகிறுத்துப் போய் குதித்தான் கிச்சாமி. அவனோடு சேர்ந்து அழுக்கு நூல்துண்டும் குதித்தது. கபிலனோ மிகவும் அடக்கமாகப் பதிலளித்தார்.
"இங்க பாரு தம்பீ, இவங்க 100 ரூபா, 300 ரூபா டெபாசிட் பண்ண வந்திருக்கலாம். ஆனா இதெல்லாம் இவங்க நாள்பூரா கூலிவேலை செஞ்சு, உழைச்சு சம்பாதிச்ச பணம். அதுனாலத்தான் நான் உழைப்புக்கு மரியாதை கொடுத்துகிட்டு இருக்கேன்"
"கலி முத்திப் போச்சு" கிச்சாமி புலம்பிக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.

முகவரி : ஒளிர்ஞர், 43, ஃபர்ஸ்ட் மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், திருமுல்லைவாயில், இரயில்வே ஸ்டேஷன் அருகில், சென்னை - 600 062

3000 பேரும் - நானும்

அறிவியல் புதினம்

இன்னும் 12 நாட்களுக்குள் ஓர் புதுமை நடக்கப் போகிறது. பூமியில் இறந்து போன புகழ்பெற்ற மாமனிதர்கள் எல்லோரும் உயிருடன் வரப் போகிறார்கள். புத்தர், காந்தி, மகாவீரர், நேதாஜி, ஐன்ஸ்டீன், அன்னை தெரசா, அம்தேத்கார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், சிவாஜி, சத்யஜித்ரே, சாக்ரடீஸ், நெப்போலியன் முதலிய புகழ்பெற்றோர் உங்கள் முன் நேருக்கு நேராக நடமாடப் போகிறார்கள்.

என் பெயர் அறிகேசி. அறிவியல் ஆர்வத்தால் வைத்துக் கொண்ட புனைபெயர். என் மீது, உலக வல்லரசுகளில் ஒன்று கொலைக் குற்றம் சுமத்தியது. அதன் அடிவருடி நாடுகள் அதற்கு தாளம் போட்டன. காரணம் இதுதான். மனிதனின் தலையையும், கொரில்லாவின் உடலையும் இணைத்து, புதிய வகை குரங்கு மனிதர்களை உருவாக்க எண்ணியது அந்த வல்லரசு. அன்றைய கருப்பு மனிதர்களுக்கு மாற்றாக இந்த குரங்கு மனிதர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள வேண்டுமென திட்டம் தீட்டியிருந்தது.

நான் மட்டும் இந்த திட்டத்துக்கு எதிர்புபுக் குரல் கொடுத்தேன். இது இயற்கைக்கு எதிரான திட்டம் என கூச்சலிட்டேன். நாலைந்து பேர் என்னை கோழி போல அமுக்கி, மயக்க ஊசி போட்டனர். மின் நாற்காலியோ, தூக்குத் தண்டனையோ கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். ஆனால் என்னை கோள் விட்டு கோள் கடத்தி விட்டார்கள்.

இந்த புதிய கோளுக்கு ஞாயிறு என பெயர் சூட்டினேன். இதுவும் பூமியைப் போல் உயிர்வளியைக் கொண்டிருந்தது. ஆனால், நம் நிலவின் பரப்புக்கு இருந்தது.இங்குள்ள மரம் செடிகள் சிவப்பு வண்ணங்களில் இருந்தன. கடல்கள், ஏரிகள், ஆறுகள் மஞ்சள் வண்ணத்தில் ஒளிவீசின. பறவைகளும், நீர்வாழிகளும் வாழ்ந்தன. ஆனால் தரையில் விலங்குகளோ, பூச்சிகளோ, மனிதர்களோ வாழவில்லை.

அந்த ஞாயிறு பந்தில் நான் மட்டுமே தனிமையில் இருந்தேன். என்னைக் கடத்திய புண்ணியவான்கள் ஒரு நல்லது செய்திருந்தார்கள். பூமியில் வெளிவந்த எல்லா திரைப்படங்களின் ஒளிவட்டுகளும், புகழ்பெற்ற தலைவர்களின் ஒளிப்படங்களும், ஒலித்தட்டுகளும், வரலாற்று காலத்து அறிஞர்களின் நூல்களும் உள்ளடக்கிய மின்னல் கணினியை (சூப்பர் கம்பியூட்டர்) என்னோடு அனுப்பி வைத்திருந்தார்கள்.

அதுபோல மரபியல், மின்னணுவியல், நுண்ணுயிரியல் ஆய்வுக்குத் தேவைப்படும் கருவிகளும் என்னோடு இருந்தன. உணவுக்கு சத்துப் பானங்களும், சத்து மாத்திரைகளும் 200 ஆண்டுகளுக்குத் தேவையான அளவில் இருந்தன. ஞாயிறிலுள்ள பறவைகள் என்னோடு நன்றாகப் பழகிவிட்டன. சுவையான பழங்களை எனக்குப் பறித்துத் தந்தன. அன்புக்கு மொழி தேவையா என்ன?

அங்குள்ள மஞ்சள் நிற தண்ணீரும் குடிக்க சுவையாகவே இருந்தது. அதில் ஒரு பறவை நம்மூர் யானையைப் போல் இருந்தது. தும்பிக்கை மட்டும் இல்லாமல், இரண்டு இறகுகளோடு வாழ்ந்தன. அதற்கு 'யாழி' என பெயர் சூட்டினேன். நான் யாழியின் மேல் அமர்ந்து கொள்ள, அது பறந்து சென்று, ஞாயிறின் எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டியது. முதலில் தனிமை எனக்கு இன்பமாகவே இருந்தது. ஆனால் 4-5 ஆண்டுகளில் வாழ்க்கை எனக்கு அலுக்கத் தொடங்கியது.

அப்போதுதான் எனக்கு ஒரு திட்டம் தோன்றியது. அதனை செயல்படுத்த மூளையைக் கசக்கிப் பிழிந்தேன். அதுபோல் புத்தர், சாக்ரடீஸ், ஐன்ஸ்டீன், முதலிய அறிஞர்களின் சிந்தனை மொழிகளை கணினியில் ஓடவிட்டு, அவர்களின் குணம், ஆளுமை, கோட்பாடுகள் இவற்றின் அடிப்படையில் அவர்களின் மரபணுவை (டிஎன்ஏ) அந்த மென்பொருள் துணையால் செயற்கையாக உருவாக்கினேன்.

புத்தருக்கும் சாக்ரடீசுக்கும் உருவங்கள் இல்லாததால், ஏறக்குறைய 75 விழுகாடு மட்டுமே துல்லியமாக அமைந்திருந்தது.அடுத்து, காந்தி, நேதாஜி, ஆபிரகாம் லிங்கன், அம்பேத்கார், விவேகானந்தர், அன்னை தெரசா, ஓசோ, பெரியார், காமராஜர் முதலிய அன்புப் புரட்சியாளர்களின் சிந்தனைகளுடன் அவர்களின் ஒளிப்படங்களையும் இணைக்க, ஏறக்குறைய 90 விழுக்காடு துல்லியத்தில் அவர்களைப் போன்ற மரபணுக்கள் தோன்றின.

திரைப்பட ஒளிவட்டுகளை ஒளிக் கணினியில் ஓடவிட்டு, புகழ்பெற்ற திரைப்பட நடிகர்களுக்கு உயிரூட்ட முயற்சிகளை மேற்கொண்டேன். தியாகராய பாகவதர், பியூ சின்னப்பா, கலைவாணர், டிஏ மதுரம், சார்லி சாப்ளின், சத்யஜித்ரே முதலிய திரைப்பட நடிகர்களின் அசையும் உருவங்கள் மற்றும் பாவங்களைப் படித்து, 95 விழுக்காடு துல்லியமான மரபணுக்கள் உருவாகின.

எம்ஜிஆர், சிவாஜி போன்றோருக்கு வண்ணத் திரைப்படங்கள் அமைந்திருந்ததால், 97 விழுக்காடு துல்லியத்தில் மரபணுக்கள் உருவாகின. முப்பரிமாண (3டி) திரைப்படங்களில் நடித்தவர்களுக்கோ, 99 விழுக்காடு துல்லியத்தில் மரபணுக்கள் வெளிப்பட்டன.

இவ்வாறு மின்னல் கணினியில் உருவாக்கி ஆக்கி வைத்திருந்த 3000 தேர்ந்தெடுத்த பெருமக்களின் மரபணுக்களை வைத்து, அவர்களுக்கு உயிர் கொடுத்து, செயற்கை முறையில் பிறக்க வைத்தேன். மேலும் 21 ஆண்டுகள் கடந்து விட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட சாதனையாளர் எல்லோருக்கும் 21 அகவை ஆகி விட்டது.

அவர்கள் பூமியில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும், தற்போதைய புதிய வாழ்க்கையைப் பற்றியும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கோ 120 அகவை ஆகி விட்டது. இந்த பருவத்திலும் கடுமையான ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். சுழிப் பெயர்ச்சி மூலம், பயணம் தொடங்கிய அதே நொடியில், நினைத்த இடத்தை அடையும் ஒளிவண்டியையும் உருவாக்கி விட்டேன்.

ஒரு முக்கிய நாளில், நான் உருவாக்கிய 3000 தலைவர்களுடனும் பூமிக்கு வந்தேன். மறுபிறவி எடுத்த தலைவர்களைக் கண்டதும், மக்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள். காந்திக்கு இந்தியப் பிரதமர் பதவி தேடி வந்தது. காமராசருக்கு குடியரசர் பதவியும்; அம்பேத்காருக்கு ஆளுநர் பதவியும்; நேதாசிக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவியும் தேடி வந்தன.ஆபிரகாம் லிங்கன், அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, சாக்ரடீஸ், புத்தர், விவேகானந்தர், ஐன்ஸ்டீன், பெரியார் எல்லோருக்கும் மாபெரும் வரவேற்பு.

தியாகராச பாகவதர், பியூ சின்னப்பா, என்எஸ் கிருஷ்ணன், எம்ஜிஆர், சிவாஜி, எம்ஆர் ராதா எல்லோருக்கும் மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. புதிய தலைமுறையினர், நான் உயிர் கொடுத்த எல்லோரையும் மீண்டும் புகழின் சிகரத்தில் வைத்தனர். இனி நான் மட்டும் தனியாக ஞாயிறுக்கு திரும்ப வேண்டுமென சலிப்பாக எண்ணிக் கொண்டேன்.

நான் புறப்படும் நாள் வந்தது. ஒளிவண்டியில் அமர்ந்தேன். இயக்கத் தொடங்கும் முன், பின்னால் திரும்பிப் பார்த்தேன். நான் புத்துயிர் பெற்ற எல்லா தலைவர்களும் அமர்ந்திருந்தனர்."பூமியில ஏற்கெனவே புகழோட வாழ்ந்து வாழ்ந்து எங்களுக்கு சலிச்சுப் போச்சு. ஒரு சராசரி குடிமகனா ஞாயிறுல வாழ விரும்புறோம். தயவுசெஞ்சு எங்களைத் தடுக்காதீங்க" எல்லோரும் என்னிடம் கேட்டுக் கொண்டனர்.

இப்போது நானும் 3000 புகழ்பெற்றவர்களும் - பூமியிலிருந்து கொண்டு வரப்பட்ட அரிசி கோதுமை முதலிய தானியங்களை ஞாயிறின் நீலவண்ண மண்ணில் விதைத்து, உழவுத் தொழில் செய்து கொண்டிருக்கிறோம்.

காணவில்லை - 30 ஆண்டுகள்

அறிவியல் சிறுகதை

னக்கு 30 வயது. இன்னும் திருமணம் ஆகவில்லை. என் கல்லூரித் தோழி கீதாவுக்கு இன்று திருமணம். இதில் என்ன புதுமை? எல்லோருக்கும் நடப்பதுதானே - என நீங்கள் முணுமுணுக்கலாம்.

ஆனால் இந்த திருமணத்தில் நம்பமுடியாத நிகழ்ச்சி ஒன்று நடக்கப் போகிறது என்பதை, நானோ நீங்களோ எதிர்பார்த்திருக்க முடியாது.

வழக்கம் போலத்தான். இறந்து போன வடமொழியில் மந்திரங்கள் முழங்கப்பட்டன. மாப்பிள்ளை திலகன், என் தோழிக்குத் தாலி கட்டினான்.ô திருமணம் முடிந்து, விருந்து தொடங்கியது. பந்தியில் மாப்பிள்ளையும் பெண்ணும் அருகருகே அமர, அவர்களுக்கு எதிரில் நான் அமர்ந்திருந்தேன். பம்பரமாகச் சுழன்று வேலை பார்த்ததால் கடுமையான களைப்பு வேறு.

சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை மஞ்சள் புகை வந்து மூடியது போல் இருந்தது. களைப்பில் சற்று கண்ணயர்ந்து உறங்கி விட்டது போலும் இருந்தது. மிஞ்சிப் போனால் 2-3 நிமிடங்கள் தூங்கியிருப்பேன்.

திடீரென விழிப்பு ஏற்பட்டது. களைப்பு அறவே நீங்கிய உணர்ச்சி; ஏதோ 12 மணி நேரம் தூங்கி எழுந்தது போல் ஒரு புத்துணர்வு. எதிரில் அமர்ந்திருந்த மணமக்களைப் பார்த்தேன்.

என்ன கொடுமை இது? கீதா - திலகனுக்குப் பதிலாக வேறு மணமக்கள் என் எதிரில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களைக் கவனித்தேன்.

எனக்கு தெரிந்த முகம் எதுவுமே இல்லை. உணவு வகைகளும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. திருமண மண்டபம் கூட அதே மண்டபம்தான். ஆனால் இப்போது பழைய கட்டடம் போல் தோன்றியது. எனக்கு என்ன ஆயிற்று? கனவு காண்கிறேனா? கிள்ளிப் பார்த்தேன் - நனவுதான்.

அல்லது என் தோழி கீதாவுக்குத் திருமணம் நடந்தது போல் கண்டது கனவா? குழப்பம் - குழப்பங்கள். யாரிடம் என்ன கேட்பது?அப்போதுதான் கவனித்தேன்.

கீதா போல் ஒரு 52 வயது பெண்மணி. அவளின் பக்கத்தில் திலகனின் தோற்றத்தில் நடுத்தர வயது மனிதர்.

"இவங்க ரெண்டு பேரும் யாரு?" பக்கத்தில் நின்றவரிடம் கேட்டேன்.

"தெரியாதா சார்? இவங்கதான் பொண்ணோட அப்பாவும் அம்மாவும்" அந்த பெண்மணியை நெருங்கினேன்.

"மேடம், நீங்க யாரு? உங்க பேரு என்ன? என் தோழி கீதாவுக்கு இன்னைக்கு கல்யாணம். நான் தூக்கக் கலக்கத்துல மண்டபம் மாறி வந்துட்டேன்னு நினைக்கிறேன் - மன்னிச்சுக்கங்க" என முனகினேன்.

அந்த அம்மாள் என்னை வியப்புடன் பார்த்தாள்.

"என்ன பாபு? அதுக்குள்ளே மறந்துட்டியா? என் பேருதான் கீதா. நாம ஒரே காலேஜ்லத்தானே படிச்சோம்?! 30 வருசத்துக்கு முந்தி என் கல்யாணத்துக்குக் கூட வந்திருந்தே"

நான் மீண்டும் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தேன். திலகன் தொடர்ந்தார்.

"கொஞ்சம் விளக்கமா சொல்லுடீ. சாரு ஏதோ குழப்பத்துல இருக்காரு" என்றார்.

"இப்ப நடக்குறது யாரோட கல்யாணம்?" கேட்டேன்.

"என் பொண்ணுப்பா. இதையும் மறந்துட்டீயா? என் பொண்ணுக்கு நீதானே ஓவியான்னு பேரு வச்சே?!" என்றாள்.

என் வாழ்க்கையில் எல்லாமே மறந்து போய் விட்டதாக, நான் நிறைய குழப்பத்தில் இருப்பதாக... இருவருக்குமே தெளிவாக்கினேன்.

என் பெயர் பாபு என்றும், திருமணமாகி மனைவியும் ஒரு மகளும் இருப்பதாகவும் - சொல்லி, என் வீட்டில் என்னை ஒப்படைத்தாள் கீதா.

என் குழப்பத்தைப் பற்றி மனைவியிடம் தெளிவாக்கினாள். திருமணமாகாத எனக்கு மனைவியும் மகளுமா?மனைவியின் முகத்தை வியப்புடன் பார்த்தேன்.

அவளுக்கு 51 வயது இருக்கும். ஓர் இளம்பெண், அங்கு தோன்றினாள். மகள் என்று அறிமுகப்படுத்தினர். அவளையும் வியப்புடன் பார்த்தேன். தனிமையில் அமர்ந்து எண்ணங்களை ஓட விட்டேன்.

என் வாழ்வில் 30 ஆண்டுகள் காணாமல் போய் விட்டன. வீட்டில் தொங்கிய நாள்காட்டி, 30 ஆண்டுகளைத் தாண்டிய ஒரு நாளைக் காட்டியது. இதற்கு என்ன காரணம்? இயற்பியல் வல்லுநர் ஒருவரைச் சந்தித்தேன்.

"சார், நீங்க 'காலக்குழி'யில மாட்டிக்கிட்டீங்க. பிரபஞ்சத்துல முடிச்சு முடிச்சா ஒருசில இடங்கள்ல காலக்குழி தோன்ற வாய்ப்பு இருக்கு. கீதா கல்யாணத்துல உங்களை மஞ்சள் புகை மூடிச்சே. அதுதான் காலக்குழியோட கற்பனைத் தோற்றம்" என விளக்கினார் வல்லுநர்.

"அதுசரீ, காலக்குழியில மாட்டுனவங்க, மற்றவங்க பார்வைக்கு... அதாவது உலகத்தோட பார்வைக்கு காணாமப் போயிடுவாங்களே" என் அய்யத்தை எழுப்பினேன்.

"அது உண்மைதான். ஆனா உங்க வாழ்க்கையில இது தலைகீழா நடந்திருக்கு. மற்றவங்க புறப் பார்வைல இருந்து நீங்க காணாமப் போகலை. ஆனா, உங்க அகப் பார்வைல 30 வருசம் காணாமப் போயிட்டீங்க" வல்லுநர் தெளிவாக்கியதும் என் குழப்பங்கள் அகன்றன.

நான் காணாமல் போன 30 ஆண்டுகளிலும் நானும் திருமணம் முடித்து, குழந்தை பெற்று, அவளை நன்றாகப் படிக்க வைத்து, சொந்த வீடு கட்டி... எல்லாக் கடமைகளையும் சரிவரச் செய்திருக்கிறேன். ஆனால் எனக்குள் நானோ காணாமல் போய் விட்டிருக்கிறேன்.

இந்த 30 ஆண்டுகளில் என் பெற்றோர்கள் இறந்து விட்டிருந்தனர். என் தம்பி தங்கை நண்பர்கள் எல்லோருமே வயதாகி விட்டிருந்தனர். இப்போதுதான் எனக்கு, திருமண வீட்டிலிருந்து வந்தது முதல் இதுவரை நான் கண்ணாடியே பார்க்க வில்லை என்பது நினைவுக்கு வந்தது.

நிச்சயமாக நானும் வயதாகி இருப்பேன். எனக்கு 60 வயது இருக்கும். ஆண்டுகளையும் இளமையையும் தொலைத்து நிற்கும் நான் ஆளுயர கண்ணாடியில் என்னை ஆவலுடன் பார்த்தேன்.

- இது நானா?

- நன்றாக உற்றுப் பார்த்தேன்.

- முகத்தையும் உடலையும் பார்க்கப் பார்க்க...

- மாபெரும் அதிர்ச்சி.

- அதே 30 வயது இளைஞனாகவே துளிக்கூட மாறாமல் தோன்றினேன்.

- அப்படியானால் உண்மையில் காணாமல் போனது எது?

கள்ளிப் பால்


சமையலுக்குப் பெயர் போனவள் என் மனைவி புவனா. ஆனால் என் நாக்கை அவளின் எந்த ருசியான சமையலும் வசீகரிக்க முடிந்ததில்லை. ஏதாவது குற்றம் கண்டுபிடித்து அவளை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பேன்.

ஒருநாள் சாம்பாரில் கொஞ்சம் உப்பு குறைந்து விட்டால் போதும்."சாம்பாரா இது? கள்ளிப் பால்" என்று காட்டுத்தனமாகக் கத்துவேன். பொரியலில் காரம் சற்று ஏறிவிட்டால் போதும்.

அடுத்த நொடியே சாப்பாட்டுத் தட்டு கூரையைக் கிழித்து, வானத்தில் பறக்கும். இப்படி சமையல் அறையில் செங்கோல் பிடித்து மனைவியை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த எனக்கு -சென்னையில் நல்ல வேலை கிடைத்தது. புதுச்சேரியில் இருந்து மாறி, சென்னையில் வாடகை வீடு பிடித்துக் குடியேறினேன்.

புதுச்சேரியில் தான் பார்த்து வரும் அரசுப் பணியை விட்டு விடுவாளா என் மனைவி? இப்படியாக நான் சென்னையிலும், அவள் புதுச்சேரியிலும் வனவாசம் செய்தோம்.

உணவகத்தில் சாப்பிட்டு சமாளிக்க நினைத்தால், வாயில் நுழையாத கோளாறுகள் எல்லாம் வந்தன. நெஞ்சு வலித்தது; கைகால்கள் குடைந்தன. கடைசியில் நண்பரின் ஆலோசனைப்படி, இரண்டு நாட்கள் 'சமைப்பது எப்படி?' ஆலோசனையும் எடுத்துவிட்டு; மின் குக்கர், மின் அடுப்பு, கடாய், அகப்பை முதலிய புள்ளிகளுடன் வெற்றிகரமாக சமையலைத் தொடங்கினேன்.

ஒருநாள் உப்பு குறைந்து குப்பை போல் இருக்கும். இன்னொரு நாள் குளம்பில் காரம் எக்கச்சக்கமாக எகிறி, மூக்கு முதல் இரப்பை வரை காந்தும். கரிந்துபோன பொரியல், வெந்தும் வேகாதது போன்ற காய்கறிகள்; ஒருநாள் வேகாத பருத்திக் கொட்டை சோறு, மறுநாள் பாயாசமாகக் குழைந்த சோறு - என்றெல்லாம் சாப்பிட்டு சாப்பிட்டு நொந்து கொண்டிருந்தேன்.

உணவு தயாரிக்கும்போது, கடைசி நேரத்தில் சாம்பார் பொடி காலியாகி விட்டது நினைவுக்கு வர - அலுவலகம் போகும் அவசரத்தில் - கையிருப்பில் இருக்கும் சிக்கன் மசாலா, மட்டன் மசாலா கலக்கி விந்தை சாம்பார் வைத்து - நாக்கிலும் சுவையிலும் செம அடி வாங்கிய நாட்களும் உண்டு.

அப்போதுதான் சமையலின் என் மனைவியைக் கொடுமைப்படுத்திய செயல்கள் ஒவ்வொன்றாக நினைவில் குதித்து நடனம் ஆடின. அவளிடம் எட்டி வீசிய சாப்பாட்டுத் தட்டுகளும், கூரையில் பிளாச்சென சிதறிய இரசமும் என்னைக் கேலியாகப் பார்த்து சிரித்தன.

இப்போது புவனாவின் சென்னை மாற்றலுக்காக (டிரான்ஸ்பர்) நாயாக பேயாக அலைந்து கொண்டிருக்கிறேன். அப்படிக் கிடைத்து விட்டால், அவள் பச்சைத் தண்ணீர் என்ன, கள்ளிப் பாலைத் தந்தாலும், அதை மலைத் தேனாக நினைத்துப் பருக வேண்டுமென ஏங்குகிறேன்.

ஆனால் இதுவரைக்கும் மாற்றல் கிடைக்கவில்லை. எப்படியோ என் நண்பர்கள் நடுவில் குப்பையான சமையலுக்குப் பெயர் போனவன் ஆகி விட்டேன்.