23.8.07

வெளிச்சம்

ன் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும். ஞாயிறுதோறும் ஏதாவது திரைப்படத்திற்கு அழைத்துப் போக நச்சரிக்க வேண்டும்.

பண்டிகைகள் வந்தால் பட்டுச் சேலை கேட்டு கண்களைக் கசக்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரி அணிந்திருக்கும் நகைகளைத் தானும் அணியும்வரை தூக்கம் வராமல் தவிக்க வேண்டும்.

ஆம் எனக்கு சராசரி மனைவி போதும். ஏனெனில் நானும் உண்டு, பருகி, தூங்கி எழும்பும் ஒரு சராசரி கணவன்தான்.

ஆனால் விதியைப் பாருங்கள். எனக்கு கிடைத்திருக்கும் மனைவி மகா அறிவுஜீவி. கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று, ஒரு கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிகிறாள்.

என்ன செய்வது? நானும் தலைகீழாக எவ்வளவோ தந்திரங்கள் செய்துவிட்டேன். அவளின் ஒரேஒரு கெட்டப் பழக்கத்தைத்தான் என்னால் மாற்ற இயலவில்லை.

"புவனேஸ்வரி, நீ நிறைய படிச்சிருக்கே. நல்ல வேலையில இருக்கே. கைநிறைய சம்பாதிக்கிறே. ஆனா உன்கிட்ட ஒரே ஒரு கெட்டப் பழக்கம்தான்"

"கெட்டப்ப் பழக்கமா? நீங்க உளர்றது எதுவுமே புரியலை" அடப்பாவி, நான் உளறவா செய்யுறேன்?

"ஹீஹீ புவனேஸ்வரி, நான் என்ன சொல்ல வர்றேன்னா... ரிட்டயர் ஆகுற மட்டும் உனக்கு கவலையில்லை. நல்ல வேலையில செட்டில் ஆயிட்டே. அதுக்கப்புறமும் எதுக்கு கண்ட கண்ட புக்ஸ்செல்லாம் படிக்குறே? ஒரு மெகசின் விடாம மேயுறே. டிவி, ரேடியோ, இன்டர்நெட்டுன்னு ஒரு நியூசைக் கூட விட்டு வைக்க மாட்டேங்குறே. இதுக்கு மேல படிச்சு என்னத்தைக் கிழிக்கப் போறே? ஏன் டைமை வேஸ்ட் பண்றே? அக்கடான்னு சும்மா இருக்கலாம்லியா?" என்று புத்திசாலித் தனமாக டயலாக்குகளை அள்ளி வீசினேன்.

சிலிர்த்துக் கொண்டாள் புவனேஸ்வரி. கோபத்தால் மூக்குநுனி சிவந்தது. தன் தங்க விளிம்புக் கண்ணாடியை கழற்றி, என்னை ஆதிவாசி போல ஒரு பார்வை பார்த்தாள்.

மனைவியின் கூர்மையான பார்வை பட்டவுடன் 60 கிலோ எடையுள்ள என் உடம்பின் ஒவ்வொரு கிலோ மாமிசமும் நடுங்கியது. என்னைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தகவலை மேயத் தொடங்கி விட்டாள் புவனேஸ்வரி.

என்னைப் பொறுத்தவரை புத்தகம் என்றாலே பாகற்காயின் மறுபிறவி. பத்திரிகைகள் நடமாடும் வேப்பங்காய்கள்.

என் இல்லத்தரசி படித்துப் படித்து பொது அறிவை வளர்ப்பதால் வானத்திலுள்ள மேகங்கள் தண்ணீருக்குப் பதிலாக பெட்ரோலை மழையாகப் பொழிந்துவிடாது என்பது என் அரிய கண்டுபிடிப்பு.

இந்த ஞாயிற்றுக் கிழமை 24 மணி நேரமும் படுக்கையில் உருண்டு வாயில் நொறுக்குத் தீனியுடனும் கையில் ரிமோட் கன்ட்ரோலுடனும் கிரிக்கெட்டை ஒரு பிடி பிடிக்கலாம் என ஐநாவுக்கு இணையாக ஒரு திட்டம் தீட்டியிருந்தேன்.

கெடுத்தாள் என் துணைவி. புவனேஸ்வரி கெஞ்சிக் கேட்டுக் கொண்டதன் பேரில் - அவள் மிரட்டலுக்குப் பயந்துதான் என்பதுதான் உண்மை - எழும்பூர் கன்னிமாரா நூலகத்திற்கு இருவரும் வந்திருந்தோம்.

வேறு கிரகத்திலுள்ள பொருட்களைப் போல அங்கிருந்த நூல்கள் எனக்குத் தோன்றின. புவனேஸ்வரியோ பல பத்திரிகைகளைப் படிப்பதும் குறிப்பெடுப்பதுமாக என் வயித்தெரிச்சலையும் இரப்பை எரிச்சலையும் குடல் எரிச்சலையும் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

அப்பாடா கன்னிமாராவை விட்டு ஒருவழியாக வெளியே வந்தபோது, நாகரீகத் தோற்றத்தில் ஒரு மனிதன் என்னைச் சந்தித்தான்.

"எக்ஸ்மியூஸ்மீ சார், என்கு கொஞ்சம் டமில் தெர்யும். என்கு சொந்த ஊர் பெங்க்ளூரு. மெட்ராஸ் டூர் வந்தேன். பட் பர்சை மிஸ் பண்ணிட்டேன். ஊருக்குப் போக ரூபா இல்லே. 300 ரூபா பஸ் டிக்கெட்"

என் வெள்ளை இதயத்தில் கருணை ஆர்ட்டீசியன் பீறிட்டது. என் ஈரல் இளகி நடுச் சாலையில் இரத்தமாகக் கொட்டும் அளவுக்கு அந்த நாகரீக மனிதன் மேல் மனம் இரங்கினேன்.

என் சட்டைப் பையிலிருந்து 500 ரூபாய் நோடை எடுத்து அவனிடம் கொடுக்க முனைய - அடப்பாவி - என் மனைவி வந்து தடுத்து விட்டாள். நாகரீக மனிதனோ விடாப்பிடியாகப் பேசினான்.

"அவரு கருணையோட தர்ற பணத்தை நீங்க ஏன் மேடம் தடுக்கிறீங்க?"

"இது கருணை கிடையாது. இளிச்சவாய்த்தனம்" என் மனைவி நெத்தியடி கொடுத்தாள்.

"ப்ளீஸ் மேடம் நான் டீசன்டான ராயல் ஃபேமில் மேடம். இந்த 500 ரூபாயை ஊருக்குப் போய் மணியார்டர் அனுப்பிச்சுடுறேன். இல்லன்னா... இப்பவே ஒரு செக் கையெழுத்து போட்டு தந்துட்டுப் போறேன். மூணு நாளு கழிச்சி பணம் எடுத்துக்கங்க"

நாகரீகன் சொல்வது எனக்கு கண்ணியமாகவே பட்டது. என் மனைவியோ விடாப்பிடியாக நின்றாள்.

"மிஸ்டர், நீங்க மணியார்டரும் அனுப்ப வேணாம். செக்கும் கிழிக்க வேணாம். இப்பவே எங்க கூட வாங்க. உங்களுக்கு நானே டிக்கெட் எடுத்து தர்றேன்"

"உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் மேடம்? நீங்க பணத்தை மட்டும் கொடுங்க. டிக்கெட் நான் எடுத்துக்கறேன். நீங்களாவது மேடத்துகிட்ட எடுத்துச் சொல்லுங்க சார்"
பாவம் என்னிடன் சிபாரிசு செய்தான். நான் சொல்லி எதைக் கேட்டிருக்கிறாள் என் இல்லத்தரசி?

"ஹலோ மிஸ்டர். வேணும்னா உங்க ஊருக்கு நானே டிக்கெட் எடுத்துத் தர்றேன். இல்லைன்னா... இதோ இந்த ஸ்டேஷன்ல எனக்குத் தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் இருக்காரு. அவர்கிட்ட உங்க பணம் காணாம போயிட்டதா ஒரு புகார் எழுதிக் கொடுங்க. நீங்க கேட்ட பணம் நான் தர்றேன்"

ராயல் ஃபேமிலி மனிதனுக்கு முகத்தில் வியர்த்து விட்டது. ஏதோ கேட்கக் கூடாததை கேட்டு விட்டது போல் பதறிவிட்டான்.

"மேடம், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பயங்கர பசி. நான் இந்த ஓட்டல்ல போய் ஒரு டீ குடிச்சிட்டு வந்திடுறேன்" என்று சொல்லி விட்டுப் போனான்.
போனவன் போனவன்தான். இதுவரை எங்கள் கண்ணில் படவில்லை.

"பார்த்தீங்களா? நான் இல்லன்னா... நீங்க உடுத்திருக்கிற வேட்டியையும் உருவி கொடுத்திருப்பீங்க. உங்க பொது அறிவை வளர்த்துக்காததுனாலத்தான் இவன்கிட்ட ஏமாற இருந்தீங்க. போன வாரம் பத்திரிகைல இப்படிப்பட்ட ஏமாத்துக்காரங்களைப் பத்தி கட்டுரை படிச்சேன்...

"நம்ம வாழ்க்கை முன்னேற... நாம ஏமாறாம இருக்க... நெறைய படிக்கணும். பொது அறிவை வளர்த்துக்கணும்" என நீண்ட சொற்பொழிவு கொடுத்தாள் மனைவி புவனேஸ்வரி.

நான் முடிவு செய்து விட்டேன். எனக்கு சராசரி மனைவி வேண்டாம். எத்தனை பிறவி எடுத்தாலும் புவனேஸ்வரிதான் என் இல்லத்தரசியாக முடிசூட வேண்டும்.

முகவரி : ஒளிர்ஞர், 43, ஃபர்ஸ்ட் மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், திருமுல்லைவாயில், இரயில்வே ஸ்டேஷன் அருகில், சென்னை - 600 062 . 9884992550

சின்ன சின்ன ஆசை

செல்வி முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டாள். கணவன் பாபு நொந்து போனான்.

"என்ன புள்ளே. என்கிட்ட கோபமா?"

"ஆமா கோபம்தான். இப்போ புதுசா நவரத்னா பட்டுப் புடவை வந்திருக்காம். பக்கத்து வீட்டுக்காரி நேத்தைக்கு மினுக்கினா. எனக்கு எவ்வளவு வயித்தெரிச்சலா இருந்துச்சு தெரியுமா?"

"செல்வி, ஏற்கெனவே உன்கிட்ட 20 பட்டுப் புடவைக இருக்குதே. போன வாரம்தானே புதுசா ஒண்ணு எடுத்தே"

"அது போன வாரம். இது இந்த வாரம். முடிஞ்சா எடுத்துத் தாங்க. இல்லேன்னா... நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்"

செல்வி பெட்டியைக் கட்டத் தொடங்கினாள். பாபு செய்வதறியாது திகைத்து நின்றான். பாபு ஒரு தனியார் நிறுவனத்தில் கைநிறைய இல்லையென்றாலும் சுமாராக ஊதியம் வாங்குகிறான்.

மனைவிக்கு பட்டுப் புடவைகள் எடுக்கிறேன் பேர்வழி என்று கடனும் வட்டியும் எக்கச்சக்கம் ஏறி விட்டது. இந்த நேரத்தில் புதிதாக தொல்லை வேறு.

"சரி புள்ளே, அழாத. கடன உடன வாங்கியாவது உனக்கு நவரத்னா பட்டு எடுத்துத் தாரேன்"

இந்த புடவையின் விலை 25 ஆயிரம் ரூபாய். கந்து வட்டிக்காரனிடம் போய் நின்றான் பாபு.

"இன்னா நைனா... ஏற்கெனவே வட்டியும் குட்டியுமா இஷ்டத்துக்கு ஏறி கிடக்கு. இதுல புதுசா கடன் வேறயா? போ போ" வட்டிக்காரன் கையை விரித்து விட்டான்.

நாயாக பேயாக பல இடங்களில் அலைந்தும் கடன் கிடைத்த பாடில்லை. புடவை இல்லாமல் எப்படி வீட்டுக்குப் போவது. செல்வி முகத்தில் எப்படி விழிப்பது?

இரவு 12 மணிக்கு பைத்தியம் பிடித்தவனைப் போல், அலைந்து கொண்டிருந்த பாபுவை சந்தேக வழக்கில் ரோந்து வந்த காவலர் கைது செய்தனர். அப்பாவி அவன் மீது, வெடிகுண்டு வைக்க முயற்சி செய்ததாக வழக்கு போடப்பட்டது.

கணவன் வாங்கிய கடனுக்காய், வட்டிக்காரர்கள், செல்வியின் வீட்டையும் பட்டுப் புடவைகளையும் பறித்துக் கொண்டனர்.

இப்போது பாபு சிறையில் களி தின்று கொண்டிருக்க, செல்வியோ, வீட்டில் குடிக்க கூழ் கூட கிடைக்காமல் பட்டினி கிடக்கிறாள்.

முகவரி : ஒளிர்ஞர், 43, ஃபர்ஸ்ட் மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், திருமுல்லைவாயில், இரயில்வே ஸ்டேஷன் அருகில், சென்னை - 600 062..
செல்பேசி: 988 499 2550

மனைவியை வசீகரிக்கும் மாய மோதிரம்

தவிட்டு நிறத் தாளில் அச்சிடப்பட்டிருந்த அந்த துண்டு விளம்பரம் 'ரம்பம் ரமணனின்' கண்களில் பட்டு தொலைத்தது. அதைப் படித்தவுடன் அவரின் இரு கண்களும் சோடியம் விளக்கு போல் மின்னின.

"உங்கள் மனைவி எப்போதும் நச்சரித்துக் கொண்டிருக்கிறாளா? உங்களை அடிக்கிறாளா? உதைக்கிறாளா? திட்டுகிறாளா? நாங்கள் தயாரித்திருக்கும் 24 கேரட் வசீகர தங்க மோதிரத்தை விரலில் அணிந்து கொள்ளுங்கள்.

இதனால் உங்கள் மனைவி நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் உங்கள் காலைத் தொட்டு கும்பிடுவாள். நீங்கள் ஆணையிட்டால், உங்கள் கால்களைப் பிடித்து விடுவாள். எருமை மாட்டைக் குளிப்பாட்டுவது போல் உங்கள் முதுகைத் தேய்த்துக் குளிப்பாட்டுவாள்.
உங்கள் ஆசை மனைவி நீங்கள் கூப்பிட்ட இடத்துக்கு எல்லாம் நன்றியுள்ள நாய்போல் குரைக்காமல், கடிக்காமல் வாலை ஆட்டிக் கொண்டே வருவாள்.

இந்த வசீகர தங்க மோதிரத்தை உங்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொடுக்க எங்கள் தேவதையான குட்டிச் சாத்தான் கட்டளை இட்டுள்ளது. இருந்தாலும் குட்டிச் சாத்தனைத் திருப்திப்படுத்த பூசை வைக்க வேண்டுமல்லவா?

அந்த பூசை படையல் செலவுக்காக வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டும் அனுப்பி வையுங்கள். மோதிரத்துக்காக நயா பைசா வேண்டாம். 24 கேரட் வசீகர மோதிரம் முற்றிலும் இலவசம். டிடி அல்லது மணியார்டர் அனுப்ப வேண்டிய முகவரி
சோனாடு சோத்தான் குருமடம், பெட்டி எண் : 000 000, கயா

"ஆகா ஓகோ, துண்டு விளம்பரத்தைக் கண்டவுடன் துள்ளிக் குதித்தார் ரம்பம் ரமணன். "என் பொண்டாட்டியோட கொட்டத்தை அடக்குறதுக்கு வழி பிறந்திடுச்சி"

ஆதம்பாக்கம் முதல் கல்பாக்கம் வரை - தனக்கு தெரிந்த நண்பர்களிடம் பல்லிளித்து, சிபாரிசுக்கு ஆள்பிடித்து, வட்டிக்காரர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, விளம்பர முகவரிக்கு பணத்தை அனுப்பி வைத்தார் ரம்பம் ரமணன்.

மூன்று நாளிலேயே பொட்டலம் வந்துவிட்டது. பொட்டலச் செலவுக்காக அஞ்சல் நிலையம் 30 ரூபாய் தனியாக கறந்து விட்டது.

பொட்டலத்தை ஆவல் கூச்சலிட பிரித்தார் ரமணன். அட்டகாசம் போங்கள். 24 கேரட்டில் மஞ்சள் நிறத்தில் மாற்று குறையாத பிளாஸ்டிக் மோதிரம்.

ரம்பம் ரமணனின் முகம் போன போக்கைக் காண எத்தனை பிறவி எடுத்தாலும் தாங்காது. சரி இந்த பிளாஸ்டிக் மோதிரத்திலாவது குட்டிச் சாத்தானின் வசீகர சக்தி இறங்கியிருக்கலாம் என்ற நப்பாசையில் விரலில் அணிந்து கொண்டார் ரமணன்.

தற்போது கிடைத்திருக்கும் தகவல் :

பூசை வைத்து குட்டிச் சாத்தானின் அருள்பெற்ற இந்த வசீகர மோதிரம் ரம்பத்தின் மனைவியை வசீகரித்ததோ என்னவோ தெரியாது. ஆனால் கடன் கொடுத்த வட்டிக்காரர்களை வசீகரித்து விட்டது.

வீட்டைச் சுற்றிலும் கந்து வட்டிக்காரர்களின் கூட்டமும் செந்தமிழில் அன்பு மிரட்டலும் நாள்தோறும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.

இதனால் ரம்பம் ரமணனின் மனைவி, கடாய் கற்பகம் தன் கணவரின் கால்களைப் பிடித்து விடாமல் இருந்தாலும், தன் மணவாளனின் திருக் கால்களை உடைக்காமல் விட்டிருப்பது புண்ணியம்.

முகவரி : ஒளிர்ஞர், 43, ஃபர்ஸ்ட் மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், திருமுல்லைவாயில், இரயில்வே ஸ்டேஷன் அருகில், சென்னை - 600 062 phone - 9884992550